எலெக்ட்ரிக்கல் வேலை இருப்பதாக அழைத்து வழியிலேயே வழிப்பறி: தூத்துக்குடியில் அதிர்ச்சி

எலெக்ட்ரிக்கல் வேலை இருப்பதாக அழைத்து வழியிலேயே வழிப்பறி: தூத்துக்குடியில் அதிர்ச்சி

எலெக்ட்ரீசியனுக்கு தங்கள் வீட்டில் வேலை இருப்பதாக போன் போட்டு அழைத்து வழியிலேயே அவரை வழிமறித்து 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(28) எலெக்ரீசியனான இவருக்கு திடீரென ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் தன் வீட்டில் எலெக்ட்ரிக்கல் வேலை இருப்பதாகவும் அதை செய்வதற்கு வருமாறும் அழைத்தார். இதனைத் தொடர்ந்து போனில் பேசியவரிடம் முகவரி கேட்ட பாலாஜி, அந்த முகவரிக்கு உடனே தன் டூவீலரில் கிளம்பினார்.

முத்தையாபுரம் பொட்டல்காடு விளக்கு பகுதியில் பாலாஜி சென்று கொண்டு இருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அந்தக் கும்பல் தான் வேலை இருப்பதுபோல் செல்போனில் பேசி பாலாஜியை அங்கு வரவைத்துள்ளது. அந்தக் கும்பல் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பாலாஜியைக் கொடூரமாகத் தாக்கி அவரிடம் இருந்த வாட்ச், செல்போன், 12 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றது. மேலும் அவரை கொடூரமாகத் தாக்கி கூகுள் பே வழியிலும் அவர் செல்போன் மூலம் 45 ஆயிரம் பணம் எடுத்தனர். தொடர்ந்து கண் இமைக்கும் நொடியில் தங்கள் பைக்கில் ஏறி தப்பிவிட்டனர். இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். படுகாயம் அடைந்த பாலாஜி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in