சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம்: 350 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை

சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம்: 350 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை

சிவகாசியில் 2023-ம் ஆண்டிற்கான தினசரி மற்றும் மாத காலண்டர்கள் விற்பனை அமோகமாக நடந்திருப்பதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் போதும், அனைவரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாமல் இடம் பிடிப்பதில் முதன்மையாக இருப்பது தினசரி காலண்டர்கள் மற்றும் மாத காலண்டர்கள் தான். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரத்யேகமாக காலண்டர்கள் தயாரிப்பு பணிகளில் மட்டும் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் பல உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தினசரி காலண்டர்களில் பல்வேறு வடிவமைப்புகள், புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இதே போல மாதக் காலண்டர்களிலும் புதுப்புது ரகங்கள் அறிமுகம் செய்யப்படுவதால் இங்கு தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பாதிப்பு காரணமாக காலண்டர் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. 2022-ம் ஆண்டு ஆரம்பம் முதல் கரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்ததால் இந்த 2023-ம் ஆண்டு அதிகளவில் காலண்டர் ஆர்டர் கிடைத்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரபல அரசியல் கட்சிகள், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தங்களது கட்சியினருக்கு வழங்குவதற்காகவும் காலண்டர்களை ஆர்டர் செய்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் தங்களது விளம்பர யுக்திக்காக காலண்டர்களைத் தேர்வு செய்ததால், இந்த ஆண்டு காலண்டர் சீசன் அமோகமாக இருந்ததாக கூறும் காலண்டர் தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த காலண்டர் தொழில் இந்த ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்றும், இந்த ஆண்டிற்கான காலண்டர் சீசன் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினர். தற்போது வரை சிவகாசி பகுதியில் சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் காலண்டர்கள் விற்பனை நடந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாக காலண்டர் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in