6 வயது சிறுமிக்கு 10 மாதமாக பாலியல் தொந்தரவு; பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டாக்ஸி டிரைவரை சிக்க வைத்த ‘பேட் டச்’!

போக்ஸோ
போக்ஸோThe Hindu

6 வயது சிறுமிக்கு 10 மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்த கேப் டிரைவரை, போக்சோ வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இந்த சம்பவம் நடந்தேறி இருக்கிறது. ஷாகின் பாக் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரை அடுத்து, முகமது அசார் என்ற 30 வயதாகும் கேப் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

6 வயது சிறுமியை அவரது பள்ளியில் சென்று விடுவது மற்றும் அழைத்து வருவதற்காக, கேப் ஒன்றினை சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமி கேப் மூலமாக பள்ளிக்கு சென்று வருகிறார்.

பாலியல் கல்வியின் தொடக்கமாக, சிறு குழந்தைகளுக்கு ’குட் டச்; பேட் டச்’ எனப்படும் நல்ல தொடுகை, கெட்ட தொடுகை குறித்து பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுமியின் பள்ளியிலும் ’குட் டச்; பேட் டச்’ குறித்து ஆசியை அறிவுறுத்தி இருக்கிறார்.

பள்ளி மற்றும் வகுப்பறையில் நடந்ததை 6 வயது சிறுமியிடம் அவரது தாயார் அன்றாடம் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் குட்/பேட் டச் குறித்து விளக்கிய சிறுமி, டிரைவர் அங்கிள் பேட் டச் செய்வதாக பேச்சுவாக்கில் தெரிவித்தார். சிறுமியின் தாயாருக்கு தூக்கிவாரிப்போட, சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து மேலும் விவரங்களை தெரிந்து கொண்டார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் வீரியம் தெரியாது, சிறுமி விவரிக்க அந்த தாய் கொதித்துப் போனார்.

பள்ளிக்கு அழைத்துச் செல்வதான தனிமையை பயன்படுத்தி 6 வயது சிறுமியை அந்தரங்கமாய் அடிக்கடி தொந்தரவு செய்ததன் மூலம் தனது இச்சையை கேப் டிரைவர் தீர்த்துக் கொண்டிருக்கிறார். உடனடியாக ஷாகின் பாக் காவல்நிலையத்தில் சிறுமியின் தாயார் புகாரளித்தார்.

டிரைவர் முகமது அசாரை அள்ளிவந்து போலீஸார் விசாரித்ததில் புகார் ஊர்ஜிதமானது. இதனையடுத்து, அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அசாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in