
கோதுமை வயலில் தொழிலதிபர் செங்கலால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள கோதுமை வயலில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவர்கள் பார்த்த போது, தலையில் ரத்தக்காயத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் ரத்தம் படிந்த செங்கல், மதுபாட்டில்கள், காலி டம்ளர்கள் கிடந்தன. இதையடுத்து அவரது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர் தானேவாவில் பகுதியைச் சேர்ந்த அகிலன் பாண்டே(55) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது ஏடிஎம் மூலம் 50 ஆயிரம் ரூபாயை நேற்று எடுத்தது தெரிய வந்தது. அவரது பர்ஸில் 15 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது ஏடிஎம்மில் எடுத்த 35 ஆயிரம் ரூபாயை அகிலன் பாண்டே வீட்டில் வைத்து விட்டுச் சென்றது தெரிய வந்தது எனவே, அகிலனுடன் இணைந்து நேற்று மது குடித்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் யாராவது செங்கலால் அவரை அடித்துக் கொலையைச் செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோதுமை வயலில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.