நள்ளிரவில் காணாமல் போன தொழிலதிபர்: கை, கால்களைக் கட்டி சடலமாக கால்வாயில் வீசப்பட்ட பயங்கரம்

பாஸ்கரன்
பாஸ்கரன்

சென்னையில் நேற்று இரவு காணாமல் போன தொழிலதிபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கால்வாயில் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(62). தொழிலதிபரான இவர் நேற்று இரவு காணவில்லை என அவரது மகன் கார்த்தி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நெற்குன்றம் சின்மயா நகர் கால்வாயில் உள்ள கால்வாயை தூய்மை பணியாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கால்வாயில் சடலம் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட சடலத்தை மீட்டனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்தது காணாமல் போன தொழிலதிபர் பாஸ்கரன் என விசாரணையில் தெரிய வந்தது.

நேற்று இரவு அவரது ஏடிஎம் கார்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் இரண்டு முறை எடுக்கப்பட்டதும் தெரிய வந்தது. கொலை நடந்த அருகே அவரது காரும் கண்டுபிடிக்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக பாஸ்கரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது ஆதாயத்திற்காக கடத்திக் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in