
கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் மாவட்டம் முழுவதும் 7000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கடலூரில் இயல்பு நிலை காணப்படுகிறது.
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் சார்பில் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு கூடுதல் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் என்ன செயல்படும் விரிவாக்கப்பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதனைக் கண்டித்து பாமக சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கிராமங்களில் நிறுத்தப்படும் பேருந்துகள் பணிமனைக்கு திரும்ப வரவழைக்கப்பட்டது.
ஆனால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும், கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியனின் அறிவித்திருந்தார். வியாபாரிகள் அச்சுமின்றி கடையை திறக்கலாம் கடையை மூட வலியுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதிகாலையில் நடைபெறும் காய்கறிச் சந்தைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை திறந்து இருந்தன. கடலூர், விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு வழித்தடத்திலும் பேருந்துகள் ஒன்று சேர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாமகவினர் அதிகம் உள்ள ஊர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜிக்கள், பத்து மாவட்ட எஸ்பிக்கள் கடலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.