இந்தியா டு வங்கதேசம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

இந்தியா டு வங்கதேசம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா - வங்கதேசம் இடையிலான பேருந்து சேவை இன்று (ஜூன் 10) மீண்டும் தொடங்கியிருக்கிறது.

டாக்கா - கொல்கத்தா இடையிலான பேருந்து சேவை இன்று அதிகாலை டாக்காவிலிருந்து மீண்டும் தொடங்கியிருக்கிறது. அத்துடன் அகர்தலா - ஆகவுரா (வங்கதேசம்) மற்றும் ஹரிதாஸ்பூர் - பேனாபோல் (வங்கதேசம்) இடையிலான பேருந்து சேவையும் தொடங்கியிருக்கிறது.

இந்தப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுவதை, வங்கதேச சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் தலைவர் தாஸுல் இஸ்லாம் ‘தி டெய்லி ஸ்டார்’ எனும் வங்கதேச நாளிதழுக்கு நேற்று அளித்த பேட்டியில் உறுதிசெய்திருந்தார்.

இன்று இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் வங்கதேசத்துக்கான இந்தியத் தூதரகம், ‘மலிவு விலையில், மக்களை மையமாகக் கொண்ட இணைப்பை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய நகர்வு’ என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. அதேபோல, அகர்தலா - டாக்கா - கொல்கத்தா - அகர்தலா பேருந்து சேவை அகர்தலாவிலிருந்து இன்று தொடங்கியிருக்கிறது. இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், இரு தரப்பு உறவை வளர்க்கவும் இந்தப் பேருந்து சேவை உதவும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

டாக்கா - சிலேட் - ஷில்லாங் - குவாஹாட்டி - டாக்கா பேருந்து சேவை தவிர, நான்கு சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டன. ஐந்தாவதாக இந்தப் பேருந்து சேவையும் விரைவில் தொடங்கப்படும் என வங்கதேச சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன் தெரிவித்திருக்கிறது.

ரயில் சேவையும் தொடங்கியது

இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவையும் மே 29-ல் மீண்டும் தொடங்கியிருக்கிறது. கொல்கத்தாவிலிருந்து வங்கதேசத்தின் குல்னா வரை செல்லும் பந்தன் எக்ஸ்பிரஸ், கொல்கத்தாவிலிருந்து டாக்கா வரை செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இதற்கு முன்னர் இயக்கப்பட்டுவந்தன. கரோனா பரவல் காரணமாக, இந்த ரயில்கள் 2020 மார்ச் முதல் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in