
சென்னையில் கர்நாடக அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் பேருந்தில் கண்ணாடியை உடைத்து தப்பியதால் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது. இன்று காலை 5.30 மணியளவில் பேருந்து சென்னை வேலப்பன்சாவடி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி மீது பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளானது. மேலும் பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் டேங்க் வெடித்து லாரியும், பேருந்தும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உடனே காவலதுறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் 22 பேர் வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து கோயம்பேடு பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து 22 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த லாரி மற்றும் பேருந்தை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்ததுடன், லாரியின் பின் பக்கம் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி(32) மற்றும் கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநர் வில்சன் சந்தோஷ்(45) ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி வேலப்பன்சாவடி சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய போது சென்னையை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நேராக லாரி டீசல் டேங்க் மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனால் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றி எரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இரு ஒட்டுநர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.