லாரி மீது பாய்ந்து உருக்குலைந்த அரசு பேருந்து; உடல் நசுங்கி உயிரிழந்த ஓட்டுநர், நடத்துநர்: உயிர் தப்பிய பயணிகள்

லாரி மீது பாய்ந்து உருக்குலைந்த அரசு பேருந்து; உடல் நசுங்கி உயிரிழந்த ஓட்டுநர், நடத்துநர்: உயிர் தப்பிய பயணிகள்

பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.

அரசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து திருச்சியில் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. திருச்சி தீரன் நகர் பணிமனையைச் சேர்ந்த அந்தப் பேருந்தை தேவேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். அதன் நடத்துனர் முருகன், முன்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து வந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளோடு வந்த அந்த பேருந்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் அருகே எறையூர் சின்னாறு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்துக்கும் முன்னால் திருச்சியை நோக்கி இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரியை ஓட்டுநர் தேவேந்திரன் கவனிக்காததால் வேகமாக சென்ற பேருந்து லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் பேருந்து முன் பகுதி நொறுங்கி உருக்குலைந்தது. இதில் ஓட்டுநர் தேவேந்திரனும் நடத்துனர் முருகனும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். பேருந்தில் பயணித்த பனிரெண்டுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தார்கள்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மங்களமேடு போலீஸாரும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் உடல் நசுங்கிய நிலையில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை சரி செய்து மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுத்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in