
பேயோட்டுதல் என்ற பெயரில் சிறுமி வாயில் கொள்ளிக்கட்டையை திணித்த 3 சாமியார்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் மஹாசமுந்த் மாவட்டத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்படுகிறது. இங்கு உடல் மற்றும் மன நலன் பாதித்தவர்களுக்கு ஆன்மிக அடிப்படையில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சொல்லப்பட்டதை நம்பி, ராய்ப்பூர் மாவட்டம் அபன்பூர் பகுதியிலிருந்து 13 வயது சிறுமி அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆசிரமத்தில் சகோதரியை சேர்ந்த அவரது சகோதரர், சில நாட்கள் கழித்து வந்தபோது சிறுமி பேச முடியாது சிரமப்பட்டிருக்கிறார். மேலும் உடலில் காயங்களும் தென்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக ஆசிரமத்தில் விசாரித்தபோது அவர் மிரட்டலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
இதனையடுத்து உறவினர்கள் உதவியோடு காவல்துறை உதவியை அந்த சிறுமியின் சகோதரர் நாடியதில், ஆசிரம ரகசியங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஆசிரமத்தில் சேர்க்கப்படுவோர் உடல் மற்றும் மனப் பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களை பீடித்திருக்கும் கெட்ட சக்திகளே காரணம் என்று தீர்க்கமாக நம்பும் ஆசிரம நிர்வாகிகள், பேயோட்டுதல் பெயரிலான நடவடிக்கைகள் மூலமாக சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள்.
ராய்ப்பூர் சிறுமிக்கும் பேயோட்டுகிறோம் என்ற பெயரில் சம்பவத்தன்றி வாயில் கொள்ளிக்கட்டையை திணித்திருக்கிறார்கள். இதில் சிறுமியின் வாய் மற்றும் உள்ளுறுப்புகள் காயமடைந்ததில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரமத்தின் நிர்வாகிகளான 3 சாமியார்களை கைது செய்திருக்கும் காவல்துறை மேலும் விசாரித்து வருகிறது.