சொந்த வீட்டில் 550 பவுன் நகை, பணம் திருட்டு; கள்ளக்காதலியுடன் சொகுசு வாழ்க்கை: சிக்கிய பேக்கரி ஓனர்

கைதான ஸ்வாதி
கைதான ஸ்வாதி

மனைவி, தாயின் நகைகள் 550 சவரனை கள்ளக்காதலிக்கு கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் பூந்தமல்லியை சேர்ந்த தொழிலதிபர். இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு சேகர்(40), ராஜேஷ்(37) என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி தூத்துக்குடியில் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சேகர், ராஜேஷ் இருவரும் அதே பகுதியில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தங்களது வீட்டில் இருந்து 550 சவரன் நகை, மற்றுல் பல லட்சம் பணம் காணாமல் போனதாகவும், வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேகர் முன்னுக்கு பின்முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

கைதான சேகர்
கைதான சேகர்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேகருக்கும் வேளச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி என்பருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. காதலி ஸ்வாதி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டி சேகரிடம் பணம் கேட்டுள்ளார். காதலி மீது கொண்ட மோகத்தால் சேகர் வீட்டிலிருந்த நகை, பணத்தை சிறுக சிறுக திருடி கொண்டு வந்து ஸ்வாதியிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஸ்வாதி, கார் வாங்கி இருவரும் ஊர் சுற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் 400 சவரனுக்கு மேல் நகையை திருடி காதலியிடம் சேகர் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சேகரையும், அவரது கள்ளக்காதலி ஸ்வாதியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ஸ்வாதியிடம் இருந்து 550 சவரன் நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in