2000 ரூபாயை கொடுத்த வாலிபர்; வாங்க மறுத்த பங்க் ஊழியர்: பைக்கில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சோகம்

2000 ரூபாயை கொடுத்த வாலிபர்; வாங்க மறுத்த பங்க் ஊழியர்: பைக்கில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சோகம்

2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்துள்ள சோக சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் பரபரப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. மே 23-ம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இதையடுத்து பொதுமக்கள் வங்கியை நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் இல்லை. காரணம் 2000 ரூபாய் நோட்டுகள் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் காணப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வசதி படைத்தவர்கள் மத்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, டாஸ்மாக் கடை மற்றும் போக்குவரத்துக்கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று தகவல் பரவியது. இதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மறுத்தனர்.

இந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்து உள்ள சோக சம்பவம் நடந்துள்ளது. தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்ட ஒருவர் அதற்காக 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ஆனால், அந்த நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர், வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். இதையடுத்து, குழாய் மூலம் பெட்ரோலை உறிஞ்சி எடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் தவிர பிற இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in