300 வேட்பாளர்களின் பட்டியல் தயார்: பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!

300 வேட்பாளர்களின் பட்டியல் தயார்: பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு!
பகுஜன் சமாஜ் கட்சிப் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா

மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் இறுதிசெய்யவில்லை. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டுவிட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார்.

“மற்ற கட்சிகள் தங்கள் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் யார் என இன்னமும் முடிவுசெய்யாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி 300 வேட்பாளர்களின் பெயர்களை இறுதிசெய்திருக்கிறது. அவர்களில் சிலரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜகவும் சமாஜ்வாதியும் இன்னமும் வேட்பாளர்களை இறுதிசெய்யாதது தங்கள் கட்சியினர் மீதே அவர்களுக்கு நம்பிக்கையின்மை நிலவுவதைக் காட்டுகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.

வேட்பாளர்களில் 90 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பிற தொகுதிகளின் வேட்பாளர்கள் தொடர்பாக எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பிற சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ஜனவரி 15-ல் மாயாவதி பிறந்தநாள். அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

2007 சட்டப்பேரவையில் அமைத்த வியூகத்தைப் போலவே, இந்த முறையும் முன்னேறிய வகுப்பினரையும், முஸ்லிம்களையும் கவரும் வகையில் அந்தச் சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் சார்பில் போட்டியிட கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. தற்போது இறுதிசெய்யப்பட்டிருக்கும் பட்டியலில் அந்தச் சமூகத்தினருக்குக் கணிசமான பிரதிநித்துவம் தரப்பட்டிருப்பதாகவே அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மாயாவதியின் வார்த்தைகளும் அதை உறுதிப்படுத்துகின்றன.

உத்தர பிரதேச மக்கள்தொகையில் பட்டியலினச் சமூகத்தினர் 20 சதவீதத்துக்கும் அதிகம். முன்னேறிய வகுப்பினர் 13 சதவீதம். முஸ்லிம்கள் 20 சதவீதம். பிராமண சமூகத்தைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, பகுஜன் சமாஜ் கட்சியின் பிராமண முகமாக அறியப்படுபவர். 2007 தேர்தலில் கிடைத்த வெற்றியை மீண்டும் பெறும் வகையில், இந்தத் தேர்தலில் முன்னேறிய வகுப்பினரையும், பட்டியல் சமூகத்தினரையும் அணிதிரட்டும் பணிகளில் அவர் இறங்கியிருக்கிறார்.

கடந்த ஓராண்டாகவே, மாயாவதியும் கட்சியின் பிற தலைவர்களும், எல்லா தொகுதிகளையும் உன்னிப்பாக ஆய்வுசெய்து, உள்ளூர் மக்களிடம் கருத்துகள் திரட்டி வேட்பாளர்களின் பெயர்களை அலசி ஆராய்ந்து இறுதிசெய்ததாக சதீஷ் சந்திர மிஸ்ரா கூறினார்.

இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் களமிறங்கி வேலை செய்யும் அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வேகம் காட்டவில்லை என்று பேசப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.