
சொத்து, பணம் கேட்டுத் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவர் மீது போலீஸார் பெண் வன்கொடுமைச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணியைச் சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப்(33). இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிசெய்து வருகின்றார். இவருக்கும், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்த சுவிதா கண்ணன்(28) என்பவருக்கும் கடந்த இருமாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அஜித்ராம் பிரதீப்க்கு வீட்டில் இருந்தே இணைய வழியில் வேலை என்பதால் வீட்டில் இருந்தவாறே பணிசெய்து வந்தார்.
அஜித்ராம் பிரதீப்க்கு வெளியில் நிறைய கடன் இருந்துள்ளது. இந்த நிலையில் தன் மனைவி சுவிதா கண்ணனிடம் பணம் கேட்டுள்ளார். மேலும் அவர் தந்தையிடம் சொல்லி, அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றித்தரவும் கேட்டுள்ளார். ஆனால் சுவிதா கண்ணன் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அஜித்ராம் பிரதீப், சுனிதா கண்ணனை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து சுசீந்திரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சுவிதா சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவிதா கொடுத்த புகாரின்பேரில் அவரது கணவர் அஜித்ராம் பிரதீப் மீது பெண் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.