அண்ணனைக் கத்தியால் குத்திக்கொலை செய்த தம்பி: விபத்து நாடகமாடிய போது சிக்கினார்

கொலை
கொலை

குடிபோதையில் தன்னிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு, விபத்து ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை ஜோசப் காலனியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஜார்ஜ் எடிசன்(42). இவரது சகோதரர் மார்ட்டின் ஜெயராஜ்(40). இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் மார்ட்டின் ஜெயராஜ் ஆத்திரத்தில் தன் அண்ணன் ஜார்ஜ் எடிசனைக் கத்தியால் குத்தினார். இதில் ஜார்ஜ் எடிசன் மயங்கவே, பயந்து போன அவரது தம்பி மார்ட்டின் ஜெயராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்ணனை சிகிச்சைக்கு சேர்த்தார்.

ஆனால் மருத்துவர்களிடம் தன் அண்ணன் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் சோதித்துப் பார்த்த போது ஜார்ஜ் எடிசன் உடலில் கத்திக்குத்து காயம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார், ஆசாரிபள்ளம் புறக்காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அவர்கள் மார்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே கத்திக்குத்து பெற்று சிகிச்சைப் பெற்றுவந்த ஜார்ஜ் எடிசன் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். அதைத் தெரிந்ததும் ஜெயராஜ் தப்பியோட முயன்றார். ஆனால், போலீஸார் அவரைக் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர். அண்ணனைக் கொலை செய்துவிட்டு தம்பி விபத்து நாடகம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in