
நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்லமாங்குடி பகுதியில் கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆகாச காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் வழிபாடு முடித்துவிட்டு வெளிப்பக்க கதவை பூட்டுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு வழிபாடு முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வெளிப்பக்க கதவின் பூட்டு மற்றும் உண்டியல் உடைந்திருப்பதை கண்ட பொதுமக்கள் கோயில் பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பூசாரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த உண்டியலில் 20,000 ரூபாய் இருந்திருக்கலாம் என கோயில் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த கோயிலில் வருடா வருடம் இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கான செலவை உண்டியல் பணத்தின் மூலமே இப்பகுதி மக்கள் இதுவரை செய்து வந்துள்ளனர்.
மேலும் திருவிழாவின்போது உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும்போது 30,000 ரூபாய்க்கும் அதிகமாக பணம் இருக்கும் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது திருவிழா நெருக்கும் நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.