
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதற்காக காவல்துறையினருக்கு ஜிபே மூலம் மாமூல் செலுத்தியது அம்பலமாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் காவல் நிலையத்தில் மோகன சுந்தரம் என்பவர் உதவி காவல் ஆய்வாளராகவும், பாபு என்பவர் காவலராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் செய்யூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள், கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களிடம் மாமூல் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. செய்யூர் பகுதிகளில் கள்ளச் சந்தையில் பெரும்பாலும் புதுச்சேரி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
செய்யூர் பகுதியில் உள்ள வெடால் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வரும் செல்வம் என்பவரின் ஜிபே கணக்கின் மூலம் இருவருக்கும் வாராவாரம் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் செல்வத்தின் ஜிபே கணக்கு மூலம் மோகன சுந்தரம் மற்றும் பாபு ஆகியோருக்கு பணம் அனுப்பி வைத்த ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.