
கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள லஞ்சம் வாங்கிய மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், சாவக்காடு தாலுகா அரசு மருத்துவமனையில் பிரதீஷ் கோஷி(45) என்பவர் மகப்பேறு மருத்துவராக உள்ளார். இதே மருத்துவமனையில் வீணா என்பவர் மயக்கவியல் நிபுணராகவும் உள்ளார்.
இந்த மருத்துவமனையில் பூவத்தூர் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவர்கள் அவரது கர்ப்பப்பையை நீக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்ப பையை நீக்க மருத்துவர்கள் பிரதீஷ் கோஷி, வீணா ஆகியோர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
சபிதாவின் கணவர் ஆஷிக் லஞ்சம் கொடுக்கத் தாமதமானதால் வேண்டுமென்றே இருவரும் அறுவை சிகிச்சையையும் தள்ளிப்போட்டனர். இதனைத் தொடர்ந்து ஆஷிக் திருச்சூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜிம்பாலின் அறிவுறுத்தல்படி, ரசாயனப் பொடி தடவிய 5000 ரூபாயை ஆஷிக்கிற்கு வழங்கினர். அதில் 3000 ரூபாயை பிரதீஷ் கோஷியிடமும், 2000 ரூபாயை மருத்துவர் வீணாவிடமும் ஆஷிக் வழங்கினார். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அரசு மருத்துவர்கள் வீணா, பிரதீஷ் கோஷி ஆகியோரைக் கைது செய்தனர். கேரளத்தில் லஞ்சம் வாங்கி அரசு மருத்துவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.