சார்பதிவாளர் அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு: ஜன்னல் கம்பிகளுக்கு நடுவே சிக்கிய 500 ரூபாய் கட்டு

ஜன்னல் கம்பிக்கு இடையே 500 ரூபாய் நோட்டுக்கட்டு.
ஜன்னல் கம்பிக்கு இடையே 500 ரூபாய் நோட்டுக்கட்டு.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் நான்கரை லட்ச ரூபாயைக் கைப்பற்றினர். இதுகுறித்து காமதேனுவில் எழுதியிருந்தோம். இந்நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜன்னலில் பதுக்கி வைத்திருந்த லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்வதற்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் கைமாறுவதாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பாலுக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் பீட்டர் பால் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது நடத்திய சோதனையில் அங்கிருந்த ஒரு அறையில் மேஜை ஒன்றில் கணக்கில் வராத 4,52,800 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதில் இரணியல் (பொறுப்பு) சார்பதிவாளர் சுப்பையா, அலுவலக ஊழியர்கள் நான்குபேர், புரோக்கர்கள் 6 பேர் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நண்பகல் சார்பதிவாளர் அலுவலகம் வழியாகச் சென்ற பொதுமக்கள் ஒருகாட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அலுவலர்கள் அமர்ந்திருக்கும் ஜன்னல் கம்பிக்கும், வெளிப்புற கதவுக்கும் இடையே யாரோ 500 ரூபாய் கட்டை பதுக்கி வைத்திருந்தனர். அது கண்ணாடி ஜன்னல் என்பதால் அது பளிச்சென வெளியில் இருந்து பார்க்கும்போது தெரிந்துவிட்டது. லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனைக்கு வந்திருப்பதை அறிந்து அதைத் தூக்கி ஜன்னல் கம்பிக்கு இடையில் போட்டார்களா அல்லது எப்பொழுதுமே வாங்கும் லஞ்சப்பணத்தை அங்குதான் பதுக்கி வைப்பது வழக்கமா என்று தெரியவில்லை. ஆனாலும் ஏற்கெனவே கைப்பற்றிய 4,52,800 ரூபாயுடன், இந்த 500 ரூபாய் கட்டையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஒரேநாளில் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மட்டும் கணக்கில் வராத நான்கரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in