
செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், காவலர் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அரியவகை குரங்குகளை கடத்திய கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு விடுவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த 15-ம் தேதி செங்குன்றம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் மகேஷ், வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த கார் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் அரியவகை வெளிநாட்டு உராங்குட்டான் குரங்குகள் 4 இருந்தது தெரியவந்தது. உடனே போலீஸார் கடத்தல்காரர்களிடம் பேரம் பேசி சில லட்சம் பணம் பெற்று விடுவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கடத்தல்காரர்கள் விமானம் மூலம் அந்த அரியவகை குரங்குகளை வெளிநாட்டிற்கு கடத்தியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கடத்தல்காரர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுடன் கூட்டு சேர்ந்து குரங்குகளை கடத்திய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர் மகேஷ், வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடத்தல்காரர்களிடம் பணம் பெற்று கடத்தலுக்கு துணைபோனது உறுதியானது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் அசோக், காவலர் மகேஷ், வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு குரங்கை கடத்திய கும்பல் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.