முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் : சிறப்பு செயலி ஏற்பாடு

முதல்வரின் நேரடிக்கட்டுப்பாட்டில் காலை சிற்றுண்டித் திட்டம் : சிறப்பு செயலி ஏற்பாடு

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தில் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இத்திட்டத்தைக் கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தவும், மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களின் பசிப்பிணியை போக்கும் வகையில் செப்டம்பர் 15-ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளில் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தை மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களிடையே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இதனைக் கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் முதல்வருக்கே நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். குறைபாடுகள், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே, இவற்றைக் களையும் வகையிலும், மாணவர்களின் பசியைப் போக்குவதில் அரசு சரியாக செயல்படும் என்பதை நிரூபிக்கும் வகையிலும் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இச்செயலியின் மூலம் காலை சிற்றுண்டித் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இச்செயலி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in