விபத்தில் மூளைச்சாவு அடைந்த செய்தியாளர்: உடல் உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினர்

சந்தானம்
சந்தானம்

சென்னையில்  விபத்து காரணமாக மூளைச்சாவு அடைந்த  செய்தியாளரின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய  இந்த பெரும் துயரத்திலும் அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.  

சென்னையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி தொகுதிகளில்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றியவர் சந்தானம் (32). இவர் தற்பொழுது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் ஒரு நாளிதழின் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றி வந்தார். கடந்த டிச 16-ம் தேதி பணி நிமித்தம் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பூண்டி அருகே சாலை விபத்தில் சிக்கினார்.

இதில்  தலையில் பலத்த காயம் அடைந்த சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  அவர்  மூளைச்சாவு அடைந்தார். இது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மனத்தை தேற்றிக்கொண்டு அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்துள்ளனர்.

இது குறித்த அனுமதியை மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர்கள் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னுரிமை பட்டியலில் உள்ள மற்ற நோயாளிகளுக்கு அவரது உறுப்புகள் இன்று தனமாக அளிக்கப்பட உள்ளது. செய்தியாளரின் குடும்பத்திற்கு சக செய்தியாளர்கள் தங்கள் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in