குட்டி ஹீரோ... பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை மூளைச்சாவு; உடலுறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!

குழந்தை
குழந்தை
Updated on
1 min read

உடல் உறுப்பு தானம் வழங்குவதில் மிக அரிய சம்பவம் ஒன்று குஜராத்தில் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர்கள் ஹர்ஷ்பாய், சேத்தன்பென் சங்கானி தம்பதி. இவர்களுக்கு கடந்த அக்டோபர் 13ம் தேடி ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தது முதல் எந்த அசைவையும் காட்டாததோடு, அழவும் செய்யாமல் இருந்துள்ளது.

இதையடுத்து, அந்த குழந்தையை மருத்துவர்கள் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். ஆனால், பல்வேறு சிகிச்சைகள் அளித்தும், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தகவலை பெற்றோரிடமும் பக்குவமாக எடுத்துக்கூறினர். இதைக்கேட்ட பெற்றோர், கதறி அழுது துடித்தனர். குழந்தையின் உடலுறுப்புகள் மூலம் பல குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கலாம் என்று அவர்களுக்கு உணர்த்திய மருத்துவர்கள், குழந்தையின் உறுப்புகளை தானமாக அளிக்க கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் குழந்தையால் , பல குழந்தைகளின் பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த அந்த தம்பதி தங்களது குழந்தையின் உடலுறுப்புகளை தானமளிக்க ஒப்புக்கொண்டனர். அந்த குழந்தையிடமிருந்து, இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கருவிழிகள், கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட மிக முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில், சிறுநீரகங்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கு கல்லீரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதலில், அந்தக் குழந்தையின் பாட்டிதான், இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்து குடும்பத்தில் அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிகச் சிறிய குழந்தையிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in