காதலியைக் கொன்று 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய காதலன்: டெல்லியைத் தொடர்ந்து உ.பியிலும் கொடூரம்

காதலியைக் கொன்று 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய காதலன்: டெல்லியைத் தொடர்ந்து உ.பியிலும் கொடூரம்

தன்னைக் காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இஷாக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராதனா. இவரை அதே ஊரைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்த நிலையில் ஆராதனாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் பிரின்ஸ் யாதவ் தனது காதலி மீது ஆத்திரமடைந்துள்ளார். திருமணம் முடிந்த பின்னும் ஆராதனா பிரின்ஸ் யாதவுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆராதனாவை கொலை செய்ய பிரின்ஸ் முடிவு செய்தார். நவ.9-ம் தேதி கோயிலுக்குப் போகலாம் என்று கூறி பைக்கில் ஆராதனாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே பிரின்ஸ் உறவினர் சர்வேஷ் காத்திருந்துள்ளார். அங்கு சென்றதும் ஆராதனா கழுத்தை நெரித்து பிரின்ஸ் கொலை செய்துள்ளார். இதன் பின் சர்வேசுடன் சேர்ந்து காதலி உடலை ஆறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசியுள்ளார். அதன் அருகில் இருந்த குளத்தில் ஆராதனாவின் தலையை வீசியுள்ளனர்.

நவ.15-ம் தேதி கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக்க கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின் தான் ஆராதனா காணாமல் போனதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

பிரின்ஸ் யாதவை நேற்று கைது செய்த போலீஸார், ஆராதனா உடல் எங்கு எங்கு வீசப்பட்டது என அடையாளம் காட்டுமாறு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த நாட்டு கைத்துப்பாக்கியால் போலீஸாரை பிரின்ஸ் யாதவ் சுட்டுள்ளார். பதிலுக்கு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் பிரின்ஸ் யாதவ் காயமடைந்தார். அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி, தோட்டா, ஆராதனாவை வெட்டிக் கொலை செய்வதற்குப் பயன்படுத்த ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இந்த கொடூரக்கொலைக்கு உதவிய சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். டெல்லியில் 35 துண்டுகளாக இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்கும் முன் உத்தரப்பிரதேசத்தில் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in