`சௌந்தர்யாவுடன் பழகாதே'; கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாலிபரை கொன்ற கள்ளக்காதலன்: மகன்களால் சிக்கிய பெண்
கள்ளக்காதலனை கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய கள்ளக்காதலன், காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் சௌந்தர்யா(37). இவருக்கு திருமணமாகி 12 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா தனது கணவரை பிரிந்து இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யாவுக்கும் அவரது கணவரின் நண்பரான மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜி(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 20 நாட்களாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி வந்தனர். நேற்று இரவு குடிபோதையில் இருந்த விஜியை சிலர் வீடு புகுந்து கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக சௌவுந்தர்யாவின் மகன்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் சிறுவர்களை அழைத்து சென்று நடத்திய விசாரணையில் நேற்று இரவு வழக்கம் போல தாய் சௌவுந்தர்யா பணிக்கு சென்று விட்டதாகவும், குடிபோதையில் இருந்த விஜி தங்களிடம் சிப்ஸ் வாங்கிவர சொல்லி கடைக்கு அனுப்பியதாகவும், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் விஜி இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் கூறியதில் சந்தேகமடைந்த போலீஸார் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தினமும் விஜி அசிங்கமாக பேசி, வெளியில் விளையாடவிடாமல் தடுத்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனால் விஜியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காவல் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபு(40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

கடந்த ஒரு மாதங்களாக பிரபு, சௌவுந்தர்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வருவதும், அடிக்கடி பிரபு, சௌவுந்தர்யா வீட்டிற்கு வந்து செல்வதை அறிந்த அவரது முன்னாள் காதலன் விஜி, பிரபு உடனான கள்ளக்காதலை துண்டிக்கும்படி சௌவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளார். பலமுறை கூறியும் சௌந்தர்யா பிரபுவுடான உறவை துண்டிக்காமல் இருவரும் சுற்றி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜி சௌவுர்ந்தயாவின் செல்போனில் இருந்து பிரபுவுக்கு மிரட்டல் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சௌந்தர்யாவுடனான கள்ள உறவை துண்டிக்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சௌவுந்தர்யா வீட்டிற்கு வந்த பிரபு மதுபோதையில் இருந்த விஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரபு அருகிலிருந்த கத்தியை எடுத்து விஜியின் கழுத்தில் குத்தியுள்ளார். பின்பு சௌவுந்தர்யா, பிரபு இருவரும் சேர்ந்து விஜியை கொலை செய்துள்ளனர். பின்னர் சௌவுந்தர்யா தனது பிள்ளைகளிடம் அம்மா வேலைக்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு புகுந்து சிலர் விஜியை கொலை செய்துவிட்டு ஓடிவிட்டதாகவும் போலீஸில் தெரிவிக்குமாறு கூறிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார், கள்ளக்காதலன் பிரபு மற்றும் சௌவுந்தர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
