ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிப்போம்: தூத்துக்குடி மாவட்ட பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிப்போம்: தூத்துக்குடி மாவட்ட பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை

கால தாமதமான பால் வினியோகம், பால் முகவர்களுக்கான இழப்பை ஈடுசெய்யாவிட்டால் ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிப்பதாக தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் ஆவினுக்கான பால் வரத்து கடந்த ஓராண்டாக கடுமையாக குறைந்து போனதாலும், அதன் காரணமாக நிலைப்படுத்தப்பட்ட மற்றும் நிறைகொழுப்பு பால் உற்பத்திக்குத் தேவையான வெண்ணெய் (Fat) கையிருப்பில் இல்லாததாலும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தியானது பாதிக்கப்பட்டு அதனால் பல்வேறு மாவட்டங்களில் விநியோகமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பால் முகவர்கள் முதல் நாளே பணம் செலுத்தி வழக்கமாக கொடுக்கும் ஆவின் பாலுக்கான  ஆர்டரில் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை  திடீர், திடீரென (அளவை) குறைத்து அனுப்புவது, திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட விழாக்கால ஆர்டர்களுக்குரிய பாலுக்கும் முதல் நாளே முன்பணம் செலுத்தினாலும் கூட அதையும் எந்த விதமான முன்னறிவிப்பும் வழங்காமல் பாலினை திடீரென குறைக்கின்றனர். இதுபோன்று தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொண்டு வருவதோடு, கடந்த சில தினங்களாகவே மிகவும் காலதாமதமாக பால் விநியோகம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பால் முகவர்கள் கேள்வி எழுப்பினால் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் கடந்து போவதுமாக இருக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் வழக்கமாக தினசரி அதிகாலை 3 மணிக்குள் பால் விநியோகம் செய்யப்பட வேண்டிய நிலையில் இன்றைய தினம் (பிப்.3) காலை 8 மணியளவிலேயே தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் நடைபெற்றிருப்பதும், பால் முகவர்களுக்கு மிகவும் கால தாமதமாக ஆவின் பால் வந்த காரணத்தால் பால் முகவர்கள் ஆவினில் இருந்து கொள்முதல் செய்த பால் பாக்கெட்டுகளில் பாதியளவிற்கும் மேல் சில்லரை வணிகர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது. அவ்வாறு தேக்கமடைந்த பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்க முடியாமலும், அப்படியே அதனைப் பாதுகாத்தாலும் கூட நாளை வரை வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடியாமல் அல்லல்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு பணிக்குச் செல்பவர்களாக இருப்பதால் தங்களுக்குத் தேவையான பாலினை பெரும்பாலும் காலை 7.30மணிக்குள் வாங்கி தேநீரோ, காபியோ தயாரித்து குடித்து விட்டு பணிக்குச் சென்று விடுவர் . அந்த நேரத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் ஆகாமல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அதற்குப் பதில் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

ஆனால், கால தாமதமாக ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டால் அது தேக்கமடைந்து பால் முகவர்களுக்கு கடுமையான பாதிப்பையே உண்டாக்கும். அதுமட்டுமின்றி ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால் தினசரி உற்பத்தியாகும் பால் பாக்கெட்டுகளில் அன்றைய தினமே அச்சிடப்பட்டிருக்கும். அப்படியானால் இன்று விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் 3-ம் தேதி அச்சிடப்பட்டிருக்கும் போது தேக்கமடைந்த பாலினை நாளைக்கு அதாவது 4-ம் தேதி வைத்து விற்பனை செய்வது இயலாது என்பதால் தேக்கமடைந்த ஆவின் பாலினால் பால் முகவர்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே இன்றைய தினம் மிகவும் காலதாமதமாக ஆவின் பால் விநியோகம் செய்ய காரணமான தூத்துக்குடி மாவட்ட ஒன்றிய நிர்வாகம் பால் முகவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய முன்வர வேண்டும். இனியாவது பால் கொள்முதலை சரிவர கவனித்து பால் பாக்கெட்டுகள் உற்பத்தியை தங்குதடையின்றி சரியாக மேற்கொண்டு பால் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் விநியோகம் செய்யவேண்டும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மாறாக ஆவின் நிர்வாகம் தொடர்ந்து மெத்தனப் போக்கோடு செயல்படுமானால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆவின் பாலினை புறக்கணிக்கும் முடிவை பால் முகவர்கள் முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in