மின்சாரம் தாக்கி லாரியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: தந்தை கண் முன் நடந்த சோகம்

மின்சாரம் தாக்கி லாரியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன்: தந்தை கண் முன் நடந்த சோகம்

சென்னையில் தந்தை கண்முன் மின்சாரம் தாக்கி லாரியில் இருந்து மகன் தூக்கியெறியப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி முல்லை நகரைச் சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் சொந்தமாக டாரஸ் லாரி வைத்து ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவரது மகன் இர்ஃபான்(18) ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக சாதிக் தனது மகன் இர்ஃபானிடம் வீட்டில் இருந்து பணம் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

இதனால் அவர் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கொருக்குப்பேட்டை ரயில்வே கூட்ஸ்செட்டிற்கு சென்று தந்தை சாதிக் பாட்சாவிடம் அவர் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது லாரியில் அரிசி லோடு ஏற்றும் பணி முடிந்து மேலே தார்பாய் விரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்பணியில் ஈடுபட்டிருந்த இர்ஃபானின் கை அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் இர்ஃபான் தூக்கி வீசப்பட்டார். இதனால் சாதிக்பாட்சா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் இர்ஃபானை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இர்ஃபானுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்..மேலும் இவ்விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. தந்தை கண்ணெதிரே மகன் மின்சாரம் தாக்கி வீசப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in