
திண்டுக்கல்லில் குப்பைக் கிடங்கில் தவறி விழுந்த சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மயக்கமடைந்தனர்.
திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில் முன்புறம் குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றப் பிடியின் உச்சமாக உள்ளது.
செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (7) இந்த குப்பைக் கிடங்கிற்குள் இன்று மாலை தவறி விழுந்தார். இதுகுறித்த தகவல் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். சிறுவனை மீட்ட போது தீயணைப்பு வீரர்கள் இருவரும் மயக்கமடைந்தனர். துரிதமாக மீட்கப்பட்ட அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குப்பைக் கிடங்கில் விஷ வாயு உற்பத்தியானதால் இருவரும் மயங்கினார்களா? துர்நாற்ற மிகுதியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் மற்றும் மாநகர் சுகாதார அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.