ஆசிட் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்த மாணவன்: குடித்த சிறுவன் உயிரிழப்பு

ஆசிட் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்த மாணவன்: குடித்த சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்தால் சிறுநீரகங்கள் செயல் இழந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ளது மெதுகும்மல். இந்த ஊரைச் சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியின் மூத்த மகன் அஸ்வின். இவர் குழித்துறை அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 24- ம் தேதி பள்ளியில் வைத்து ஒரு மாணவர் அஸ்வினுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கிக் குடித்துள்ளார். வீட்டிற்குச் சென்றதும் அஸ்வினுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வாயிலும் புண் ஏற்பட்டது.

இதனைத் தொடந்து சுனில் தன் மகன் அஸ்வினை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். அப்போது குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருப்பது தெரியவந்தது. இதனால் மாணவன் அஸ்வினுக்கு குடல், தொண்டை ஆகியவை பாதிக்கப்பட்டது. இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அஸ்வின் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

பள்ளியில் அஸ்வினை விட வயது மூத்த மாணவர் ஒருவர்தான் அந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அஸ்வின் அதைக் குடித்துக் கொண்டு இருக்கும்போதே இன்னொரு மாணவர் வந்து அதைத் தட்டிவிட்டுள்ளார். இதையெல்லாம் குளிர்பானம் குடித்த அன்று மாலை அஸ்வின் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கு குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த மாணவனைக் கண்டிபிடிக்கும் முயற்சியில் களியக்காவிளை போலீஸார் ஈடுபட்டுவந்தனர். அதேநேரம் பள்ளிதரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாததாலேயே குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளியைக் கண்டுபிடிக்கக்கோரி போராட்டங்களும் நடந்துவந்தது.

இந்நிலையில் நெய்யாற்றங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அஸ்வின் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in