சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை: 6 காவலர்கள் அதிரடியாக கைது

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடித்துக்கொலை: 6 காவலர்கள் அதிரடியாக கைது

ரயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட 17 வயது சிறுவன் வார்டன்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சீர்திருத்தப்பள்ளியைச் சேர்ந்த 6 காவலர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மூத்த மகன் கோகுல்ஸ்ரீ (17). தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரியைத் திருடியதாக கோகுல்ஸ்ரீயை ரயில்வே போலீஸார் கைது செய்து டிச.29-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன் பின் அவர் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தாம்பரம் ரயில்வே போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிச.31-ம் தேதி திடீரென கோகுலுக்கு வலிப்பு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோகுல்ஸ்ரீ ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தனது மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கோகுல்ஸ்ரீயின் தாய் நிர்மலா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த கோகுல்ஸ்ரீயின் உடல் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா பார்வையிட்டு வீடியோ பதிவுடன் கூடிய உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த காவலர் ஆனஸ்ட்ராஜ் சிறுவனை முதலில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சிறுவன் அவரது கையைக் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த காவலர்கள் ஆனஸ்ட் ராஜ், சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர், மோகன் மற்றும் சந்திரபாபு ஆகிய 6 பேர் சேர்ந்து கோகுல்ஸ்ரீயை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து சிறுவன் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீர்த்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in