
சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் வயலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,335 புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை சீர்காழி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ( 50). இவரது வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சீர்காழி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சோதனைக்காக ஆறுமுகத்தின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றனர். அதைக் கண்டதும் ஆறுமுகம் வீட்டைவிட்டு வெளியேறி தப்பி ஓடிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வீடு மற்றும் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதி ஆகிய இடங்களில் போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 650 சாராய பாட்டில்கள் மற்றும் 685 மதுபான பாட்டில்கள் வயல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்துள்ள போலீஸார் தப்பியோடிய சாராய வியாபாரி ஆறுமுகத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். வயலில் நெல் தான் விளையும் என்றிருந்த சீர்காழி பகுதி மக்கள் வயலில் மதுவும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.