இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்: ‘ஆழமான பேச்சுவார்த்தை’யின் அர்த்தம் என்ன?

இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்: ‘ஆழமான பேச்சுவார்த்தை’யின் அர்த்தம் என்ன?

உக்ரைன் போர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி, ஆயுதக் கொள்முதல், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற எனப் பல்வேறு விவகாரங்கள் இந்திய வெளியுறவுத் துறையின் முக்கிய பேசுபொருளாகியிருக்கின்றன. இந்தச் சூழலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருவதும், மத்திய அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதும் கவனம் குவித்துவருகின்றன.

அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 21-ல் இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. பிரிட்டன் பிரதமர் எனும் முறையில் முதன்முறையாக அவர் இந்தியா வருவதும் கவனிக்கத்தக்கது. இதுதொடர்பாக போரிஸ் ஜான்சனின் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்தச் சந்திப்பின்போது பிரிட்டன் பிரதமரும் இந்தியப் பிரதமரும் ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, “சர்வாதிகார அரசுகளிடமிருந்து நமது அமைதிக்கும் வளத்துக்கும் அச்சுறுத்தல் எழுந்திருக்கும் நிலையில், ஜனநாயக சக்திகளும் நட்பு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” என போரிஸ் ஜான்சன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

உக்ரைன் போர் தொடர்பாக இரு நாடுகளும் எதிரெதிரான பார்வையைக் கொண்டுள்ளன. ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கும் பிரிட்டன், போரில் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருக்கிறது. மறுபுறம் இந்தியாவோ இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. தவிர, ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில், இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் எந்தெந்த விஷயங்கள் குறித்துப் பிரதமர் மோடியிடம் பேசுவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சி போன்ற விஷயங்கள் முதல், எரிசக்தி பாதிகாப்பு மற்றும் ராணுவ ரீதியிலான பாதுகாப்பு போன்றவை குறித்து பேசப்படும் என போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். “முக்கியமான பொருளாதார சக்தியாகவும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக சக்தியாகவும் விளங்கும் இந்தியா, ஸ்திரத்தன்மையற்ற இன்றைய காலகட்டத்தில், மிகவும் மதிப்புக்குரிய கூட்டாளி ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘ஏப்ரல் 22-ல் இரு தலைவர்களும் வியூக அடிப்படையிலான பாதுகாப்பு, ராஜதந்திர மற்றும் பொருளாதாரக் கூட்டணி குறித்துப் பேசுவார்கள். ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நல்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 21-ல், குஜராத்தின் அகமதாபாத் நகருக்குச் செல்லும் போரிஸ் ஜான்சன், இரு நாடுகளிலும் முக்கியத் தொழில் துறைகளில் செய்யப்படவிருக்கும் முதலீடுகள் குறித்தும், அறிவியல், சுகாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்ஸிட் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துவிட்ட பிரிட்டன், ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலான உறவுகளை வளர்க்கும் முனைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in