
கோவை பேரூர் அருகே 5 குட்டிகளுடன் வந்த 12 யானைகள் அப்பகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணறு, விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோவை பேரூர் அருகே தீத்திபாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் தனி நபருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் 5 குட்டிகள் உட்பட 12 யானைகள் அங்கு வந்தன. அப்பகுதியில் ஏக்கர் கணக்கில் வளர்ந்திருந்த தீவனப் புல்லை யானைக்கூட்டம் மேய்ந்தன. அத்துடன் அருகில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தின.
மேலும் அத்தோட்டத்தில் தக்காளிச் செடிக்கு செல்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களையும் நாசப்படுத்தின. இதன் பின் அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்கு யானைக் கூட்டம் சென்றுவிட்டது. யானைகளால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.