ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்த இந்தியா: தொடங்கியது பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி

பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட்
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட்இந்தியா - ஆஸ்திரேலியா அணி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இப்போட்டியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று நாக்பூரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா ஒரு ரன் எடுத்திருந்தபோது இரண்டாவது ஓவரிலேயே முகமது சிராஜிடம் எல்பிடபுள்யு முறையில் அவுட்டானார். அதற்கு அடுத்த ஓவரில் ஒரு ரன் எடுத்திருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை முகமது சமி போல்டாக்கினார். இதனால் ஆரம்பத்திலேயே 2-2 என்ற ரன்ரேட்டில் திணறியது ஆஸ்திரேலியா. ஆனாலும், அடுத்து களமிறங்கிய லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிதானமாக நிலைத்து ஆடி வருகின்றனர்.

இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கும் வரை யார் பிளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது. ஏனென்றால் சமீபகாலமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். இவர்களில் யார் இந்த டெஸ்டில் இடம்பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் கடைசிவரை நீடித்தது. அதுபோல பந்துவீச்சில் கலக்கி வரும் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரில் யார் ஒருவர் அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எகிறவைத்தது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் இடம்பிடித்துள்ளனர். அதேபோல காயம் காரணமாக ஆடமுடியாமல் உள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக இந்த டெஸ்டில் கே.எஸ்.பரத் களமிறங்கியுள்ளார். மேலும், இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2012க்குப் பிறகு இந்திய மண்ணில் கடைசியாக ஆடிய 15 டெஸ்ட் தொடர்களையும் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து வென்றுள்ளது. அதேபோல 2004க்குப் பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி எந்த டெஸ்ட் தொடரையும் வென்றதே இல்லை. கடைசியாக இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கடைசி 3 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது. இதில் 2 தொடர்களை சொந்த மண்ணிலேயே இழந்தது ஆஸ்திரேலியா. எனவே இந்த தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுமே முனைப்பு காட்டி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in