அசாம் எல்லைப் பிரச்சினை: மேகாலயாவில் மேலும் 48 மணிநேரத்திற்கு இணையசேவை முடக்கம் - தொடரும் பதற்றம்!

அசாம் எல்லைப் பிரச்சினை: மேகாலயாவில் மேலும் 48 மணிநேரத்திற்கு இணையசேவை முடக்கம் - தொடரும் பதற்றம்!

அசாம் எல்லைப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுவதால், மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடையை மேலும் 48 மணி நேரத்திற்கு மேகாலயா அரசு நீட்டித்துள்ளது.

அசாம்-மேகாலயா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படுகின்றன. கடந்த செவ்வாய் கிழமையன்று மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலை மாவட்டத்தின் முக்ரோ பகுதியிலிருந்து மரக்கட்டைகள் ஏற்றிவந்த லாரியை அசாம் வனத்துறை போலீஸார் தடுத்து நிறுத்தி டயரில் துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து லாரியின் ஓட்டுநர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இதனால் கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மேகாலயாவைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் அசாம் வனக் காவலர் ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அசாம் மற்றும் மேகாலயா எல்லைப்பகுதிகளில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதில் இரு மாநிலப் பிரச்சினையாகவும் உருவெடுத்தது. எனவே சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கு ஜெயந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி - போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் மாவட்டங்களில் இணைசேவை முடக்கப்பட்டது. அசாமிலிருந்து மேகாலயாவுக்கு வாகன சேவையும் தடை செய்யப்பட்டது.

நிலைமை இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் இந்த 7 மாவட்டங்களில் மேலும் 48 மணி நேரத்துக்கு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறையின் அறிக்கையில், வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள் சட்டம் ஒழுங்கை கடுமையாக சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அசாம் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, மத்திய அரசும் இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in