சட்டத்தை காவல்துறையே கையில் எடுப்பதா?... 'சிங்கம்' போன்ற படங்களுக்கு எதிராக சீறிய நீதிபதி!

தமிழ் ’சிங்கம்’
தமிழ் ’சிங்கம்’

‘சிங்கம்’ போன்ற திரைப்படங்கள் சித்தரிக்கும் காவல்துறையினருக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், காவல்துறையினர் மத்தியில் சீற்றம் காட்டியிருக்கிறார்.

சினிமாக்கள் சித்தரிக்கும் காவல் துறையினர் மீது ஏக விமர்சனங்கள் உண்டு. வில்லன், போலீஸார் மட்டுமல்ல, பொதுவெளியில் கொண்டாடப்படும் ஹீரோ போலீஸின் மறுபக்கமும் விவாதத்துக்கு உரியது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, நீதிமன்ற விசாரணைகளைப் புறந்தள்ளி தாங்களே தீர்ப்பை வழங்கும் சினிமா போலீஸாரை ரசிகர்கள் தங்கள் பங்குக்குக் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும், அவ்வாறு சட்டத்தை கையில் எடுக்கும் போலீஸ் அதிகாரிகளை மக்கள் வரவேற்கிறார்கள். இந்த வகையில் பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் உள்ளிட்டவற்றில் குற்றம்சாட்டப்பட்டோரை, விசாரணையின்றி என்கவுன்டரின் பெயரில் சுட்டுக்கொல்லும் போலீஸார் வரவேற்பு பெறுகிறார்கள்.

இந்தி ’சிங்கம்’; உள்படம் நீதிபதி கவுதம் படேல்
இந்தி ’சிங்கம்’; உள்படம் நீதிபதி கவுதம் படேல்

விசாரணை நடைமுறைகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றுக்கு காத்திராது உடனடி தீர்ப்பாக உத்தரவாகும் இவற்றை மக்கள் வரவேற்பதும், போலீஸார் அவற்றைத் தொடர்வதும் ஆபத்தானது. இத்தகைய கருத்தை ஒட்டியே மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியான கவுதம் படேல் என்பவர் பேசியிருப்பது, இந்த விவகாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்திய காவல்துறை அறக்கட்டளையின் வருடாந்திர நாள் மற்றும் காவல்துறை சீர்திருத்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பேசிய நீதிபதி கவுதம் படேல், சினிமா ஹீரோ பாணியிலான போலீஸாரையும், அவர்களைச் சித்தரிக்கும் சினிமாக்களையும் கடிந்து கொண்டார்.

" 'சிங்கம்' போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். நீதிமன்ற விசாரணைக்கு காத்திராது, காவல்துறையினரே தீர்ப்பை வழங்கும் போக்கை அவர்கள் வரவேற்கிறார்கள். போலீஸார் மத்தியிலும் இந்த ஹீரோ போலீஸ் மோகம் பரவியிருக்கிறது. இந்த போக்கு ஆபத்தானது. சட்டப்படியான நடைமுறைகளை மதிக்காத மனநிலை, காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் வளர்வது மோசமான அறிகுறி” என்று ஆரம்பித்து போலீஸ் ஹீரோக்களை தோலுரித்திருக்கிறார்.

இன்ஸ்டன்ட் தீர்ப்புகள், என்கவுன்டர் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றின் மீது பொதுவெளியில் அதிகரிக்கும் கவர்ச்சியின் மத்தியில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் சீற்றம் கவனம் பெற்றிருக்கிறது.

’சிங்கம்’ சூர்யா
’சிங்கம்’ சூர்யா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியான ’சிங்கம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற, அதன் அடுத்தடுத்த பாகங்கள் தமிழில் வெளியாயின. மேலும் அதே பெயரில் இந்த திரைப்படம் அஜய் தேவ்கன் நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 2011-ல் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்றது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பொதுமக்கள் மட்டுமன்றி போலீஸாரும் ’சிங்கம்’ திரைப்படங்களை கொண்டாடினார்கள். காவல்துறையின் உயரதிகாரிகள், இந்த சிங்கம் படங்களை சிறப்புக் காட்சியாக போலீஸார் காண வழி செய்தார்கள். இத்தகைய ’சிங்கம்’ மோகத்துக்கே தற்போது குட்டு வைத்ததுடன், காவல்துறையினர் மத்தியிலும் சீற்றம் காட்டியிருக்கிறார் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in