மது போதையில் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

மது போதையில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தினமும் இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்து நகர் விரைவு ரயில் புறப்படும். நேற்று இரவு இந்த ரயில் புறப்படுவதற்கு முன்பு வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம போன்கால் ஒன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை நடவடிக்கைகளால் முத்துநகர் விரைவு ரயிலும் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. தொடர்ந்து இரவு 10.10 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து கிளம்பும் மணியாச்சி ரயிலிலும் சோதனை செய்தனர். ஆனால், அதிலும் எதுவும் சிக்கவில்லை.

தொடர்ந்து போலீஸார் போன் வந்த அலைபேசி எண்ணை சோதித்தனர். அப்போது அது குரும்பூர் செல்போன் டவரைக் காட்டியது. போலீஸாரின் தொடர் விசாரணையில் குரும்பூர் அருகில் உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறைத் தொழிலாளி கணேசமூர்த்திதான் போன் செய்தது தெரியவந்தது. குடும்பத் தகராறில் மனைவியைப் பிரிந்து வாழும் கணேசமூர்த்தி மதுபோதையில் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குரும்பூர் போலீஸார் அவரை இன்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in