`விமானம் வெடித்துச் சிதறும்'- சென்னை விமான நிலையத்திற்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்!

`விமானம் வெடித்துச் சிதறும்'- சென்னை விமான நிலையத்திற்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலைய ஆணையத்திற்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

சென்னை, மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் விமான நிலையத்திற்கு நேற்று மாலை ஒரு மெயில் வந்திருந்தது. அந்த மெயிலில், பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஒருவர் விமானத்தில் பயணிக்க இருக்கிறார். அவர் வெடிகுண்டுகளுடன் பயணிப்பதால், விமானம் வெடித்துச் சிதறும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் எப்போது, எந்த விமானம் என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இது போலியாக உருவாக்கப்பட்ட மெயில் ஐடியிலிருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மெயில் அனுப்பியவர் யார், எதற்காக மிரட்டல் விடுத்தார் எனத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வெளிநாடு செல்லும் பயணிகளிடமும் கடுமையான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in