நடுவானில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; இந்தியாவில் தரையிறங்க மறுத்த ஈரான் விமானம்: நடந்தது என்ன?

நடுவானில் வெடிகுண்டு அச்சுறுத்தல்; இந்தியாவில் தரையிறங்க மறுத்த ஈரான் விமானம்: நடந்தது என்ன?

ஈரானிலிருந்து இன்று காலை சீனா சென்ற பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த விமானம் தரையிறங்காமல் சீனாவுக்குப் பறந்துசென்றதும் பேசுபொருளாகியிருக்கிறது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த 'மஹான் ஏர்' விமான நிறுவனத்தின் விமானம், அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டு சீனாவின் குவான்ஜோவ் நகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

காலை 9.20 மணி அளவில், அந்த விமானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியாவின் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. கூடவே, ஜெய்ப்பூர் அல்லது சண்டிகரில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், அந்த விமானத்தின் விமானி அந்த இரு விமான நிலையங்களிலும் தரையிறங்க விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டார்.

அதேசமயம், அந்த விமானத்தின் பாதுகாப்புக்காக இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் உடனடியாகக் கிளம்பிச் சென்றன. பாதுகாப்பான தொலைவில் பறந்தபடி அந்த விமானத்தைப் பின்தொடர்ந்து சென்றன. அதன் பின்னர் அந்த விமானம் சீன வான் எல்லைக்குள் நுழைந்தது.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய விமானப் படை இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இந்திய வான் எல்லையில் அந்த விமானம் பறந்தபோது அது தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

யார் சொன்ன தகவல்?

பாகிஸ்தானின் லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தான் இப்படி ஒரு தகவலை இந்தியாவுக்குச் சொல்லியிருக்கிறது என இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏன் இந்தியாவில் தரையிறங்கவில்லை?

வெடிகுண்டு அச்சுறுத்தலைப் புறக்கணித்துவிட்டு, பயணத்தைத் தொடருமாறு ஈரான் அரசு அறிவுறுத்தியதால், ‘மஹான் ஏர்' விமானி இந்தியா முன்வைத்த யோசனைகளை ஏற்க மறுத்து தொடர்ந்து விமானத்தை சீனாவை நோக்கிப் பறக்கச் செய்தார் என்கின்றன அதிகாரபூர்வத் தகவல்கள். மொத்தத்தில் பாகிஸ்தானிடமிருந்து வந்ததாகச் சொல்லப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தலில் உண்மை இல்லை என்றே தெரியவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in