
பெங்களூருவில் உள்ள ரயில் முனையத்தில் உள்ள பிளாஸ்டிக் டிரம்மில் இளம்பெண் சடலம் கிடந்ததால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெங்ளூருவில் உள்ள சர். எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் தானியங்கி கதவுக்கு அருகில் நேற்று இரவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதைக்கண்ட ஆர்பிஎஃப் பணியாளர்கள், பையப்பனஹள்ளி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து டிரம்மைப் பார்த்த போது இளம்பெண்ணின் சடலம் இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு ரயில் நிலையத்தில் இதுபோன்று பெண் சடலம் கண்டெடுக்கப்படுவது மூன்றவாது சம்பவமாகும். ஜன.4- ம் தேதி, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 1-ல் இருந்த நீலநிற டிரம்மில் இருந்து 20 வயதுடைய அழுகிய பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில், விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஒன்றில் சாக்குப்பையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் இதுவரை போலீஸாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காணாமல் போனவர்களின் பட்டியல்களைச் சரிபார்க்க கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு கண்டெடுக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.
பெங்களூரு சம்பவத்தைப் போலவே ஆந்திரப்பிரதேசத்திலும் ஒரு வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஏப்.9-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஓர்வாகல் காவல் நிலையம், தேசிய நெடுஞ்சாலை 40-ல் நீல நிற டிரம்மில் சுமார் 25 வயதுடைய பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அப்பெண் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கிலும் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. நீல நிற டிரம்மில் இளம்பெண்கள் பிணமாக கண்டெடுக்கப்படும் நிகழ்வு தொடர்வதால் பெங்களூரு ரயில் நிலையத்தில் பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.