இஸ்லாமியர்களை குறி வைத்து செயல்படும் டெல்லி பாஜக

40 முஸ்லிம் பகுதி பெயர்களை மாற்ற கேஜ்ரிவாலுக்கு வலியுறுத்தல்
இஸ்லாமியர்களை குறி வைத்து செயல்படும் டெல்லி பாஜக

முகலாய மன்னர்கள் ஆண்ட டெல்லியின் பல பகுதிகளுக்கு இஸ்லாமியப் பெயர்கள் உள்ளன. இவற்றில் 40 பெயர்களை மாற்ற வேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை வலியுறுத்தியுள்ளது பாஜக.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, "டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கு முஸ்லிம்களின் பெயர்கள் உள்ளன. இதை மாற்ற வேண்டும் எனக் கோரி தென்பகுதி நகராட்சியில் பாஜக உறுப்பினரான பகத்சிங் டோகாஸால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில், முகம்மதுபூர் எனும் பெயரை மாதவ்புரம் என்பது உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. இது அப்பகுதிவாகிகளின் விருப்பம் ஆகும். ஆனால், இதை டெல்லி அரசு நிர்வாகம் கண்டுகொள்ளாமல், பதிலும் அனுப்பாமல் கிடப்பில் வைத்துள்ளது. இந்த தீர்மானத்தை டெல்லி பாஜக சார்பில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

பாஜகவின் இப்பட்டியலில் டெல்லி நகர்ப்புறத்தின் முக்கியப் பகுதிகளான ஹுமாயூன்பூர், யூசுப் சராய், மஸ்ஜீத் மோட், மசூத்பூர், பேர் சராய், ஹோஸ் காஸ், பேகம்பூர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இத்துடன் டெல்லியை சுற்றியுள்ள கிராமங்களின் முஸ்லிம் பெயர்களும் மாற்றக் கோரும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. பத்தேபூர் பேரி, ஷேக் சராய், ஜம்ரூத்பூர் உள்ளிட்டவை அப்பட்டியலில் அணி வகுக்கின்றன. இதுபோல், டெல்லியில் முஸ்லிம்களின் பெயர் மாற்றத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில், டெல்லியின் அவுரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை எனும் பெயரில் டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் கடந்த ஆகஸ்ட் 2015-ல் மாற்றி இருந்தது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் இருந்த பகுதிகளின் தலைநகரமாக ஆக்ரா அமைக்கப்பட்டு நிர்வாகிக்கப்பட்டது. இது 1526 முதல் 1540 வரையிலும், பிறகு 1555 முதல் 1571 வரையிலும் இருந்தன. மீண்டும் 1598 முதல் 1648 வரை கடைசியாகவும் ஆக்ரா, முகலாயர் ஆட்சியின் தலைநகராக இருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதனிடையே, ஆக்ராவின் அருகிலுள்ள பதேபூர் சிக்ரியும் 1571 முதல் 1585 வரையிலும் தலைநகராக இருந்தது. 1586 முதல் 1598 வரையில் இன்றையப் பாகிஸ்தானில் உள்ள லாஹூர் தலைநகரானது. முகலாய மன்னர் ஷாஜஹான் காலத்தில் இந்த தலைநகரம் 1648-ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது. 1857-ம் ஆண்டு வரை இருந்த முகலாயர் ஆட்சிக்கு பின் வந்த ஆங்கிலேயர்களின் தலைநகராகவும் டெல்லி தொடர்ந்தது.

எனினும், டெல்லியில் முகலாயர் காலத்தில் வைக்கப்பட்ட எந்த முஸ்லிம் பெயர்களை மாற்றவில்லை. இந்த பெயர் மாற்றம் சுதந்திரத்திற்கு பின் பாஜகவால் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் உள்ளன. இவை எதையும் கண்டுகொள்ளாத வகையில், முஸ்லிம்களின் பெயர் மாற்றம் உத்தர பிரதேசத்திலும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டங்களில் பைஸாபாத் என்பது அயோத்யா எனவும், அலகாபாத் என்பதை பிரயாக்ராஜ் எனவும் பாஜக அரசு மாற்றி விட்டது. இப்பட்டியலில் மேலும் பல மாவட்டங்களும், தாலுக்காக்களும் தாங்கியுள்ள முஸ்லிம் பெயர்கள் மாற்றும் முயற்சி உபியில் தொடர்கிறது.

Related Stories

No stories found.