‘ஊழல் நிறைந்த, பயனற்ற அரசு!’

காங்கிரஸ் தலைவர்களின் வார்த்தைகளை வைத்தே கடுமையாகச் சாடிய ராஜஸ்தான் பாஜக
ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா
ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியாகோப்புப் படம்

“அசோக் கெலாட்டின் வார்த்தைகளை வைத்தே சொல்கிறேன்... இதுவரை இப்படி ஒரு பயனற்ற, ஊழல் நிறைந்த அரசை நானும் ராஜஸ்தான் மக்களும் கண்டதே இல்லை” - மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவின் வார்த்தைகள் இவை. உட்கட்சி மோதலில் தடுமாறிக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு மேலும் குடைச்சல் கொடுக்கும் விதமாக பாஜக அடிமேல் அடி கொடுத்துவருகிறது. அவற்றில் ஒன்றுதான் சதீஷ் பூனியாவின் இந்த சரமாரி விமர்சனம்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் மோதல் நிலவிவருகிறது. 2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையில் மோதல் தொடங்கிவிட்டது. ராஜஸ்தானில் 2013 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி. 2018 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது.

ஆனால், வெற்றிக்குப் பின்னர் முதல்வர் பதவி மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்குச் சென்றது. இதனால் கடும் அதிருப்தியடைந்த சச்சின் பைலட் பல்வேறு தருணங்களில் அசோக் கெலாட்டுடன் மோதிவந்தார். இதன் உச்சமாக 2020-ல் தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் சென்று முகாமிட்டார். சச்சின் பைலட்டின் கலகத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், ராஜஸ்தான் பாஜக அதை மறுத்தது. அதன் பின்னர் சச்சின் பைலட்டின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால் அவர் கட்சி தாவும் முடிவைக் கைவிட்டார். எனினும், நீறுபூத்த நெருப்பு போல இரு தரப்புக்கும் இடையில் பகைமை வெளிப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

இடையில், சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராகும் வாய்ப்பு வந்தபோதுகூட, ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுத்தர அசோக் கெலாட் மறுத்துவிட்டார். சமீபத்தில் கூட சச்சின் கலகம் செய்ததன் பின்னணியில், அமித் ஷா இருந்ததாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். சச்சின் பைலட் ஒரு துரோகி என்றும் சாடியிருக்கிறார். குருகிராமில் சச்சின் தனது ஆதரவாளர்களுடன் ஒரு மாத காலம் தங்கியிருந்தபோது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அங்கு சென்று அவர்களைச் சந்தித்ததாகவும், சச்சின் உட்பட அனைவருக்கும் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அசோக் கெலாட் கூறிவருகிறார். வழக்கம்போல் இந்தக் குற்றச்சாட்டுகளை சதீஷ் பூனியா மறுத்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களுக்குள் நடக்கும் இந்த மோதலை ரசித்து கவனித்துவரும் பாஜக, அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்தே காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸை வீழ்த்த அவர்களது உட்கட்சி மோதலையே ஓர் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது.

அப்படித்தான், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் பூனியா மேற்சொன்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி அசோக் கெலாட் அரசை விமர்சித்தார். அசோக் கெலாட் தன்னை விமர்சிக்க ஊழல்வாதி, பயனற்றவர் என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சச்சின் பைலட் சமீபத்தில் குறிப்பிட்டார். அதே வார்த்தைகளை எடுத்துக்கொண்டு சதீஷ் பூனியா தொடுத்திருக்கும் விமர்சனக் கணை காங்கிரஸாரைக் கலங்க வைத்திருக்கிறது

கூடவே, சாலை வசதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் தரம் குறித்து விமர்சித்திருக்கும் சதீஷ் பூனியா, பெண்கள், பூசாரிகள் என யாருக்கும் அசோக் கெலாட் அரசில் பாதுகாப்பு இல்லை என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in