மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவாக விமர்சனம்: பாஜக எம்பி-க்கு கட்சி தலைமை நோட்டீஸ்!

மம்தா பானர்ஜி, திலீப் கோஷ்
மம்தா பானர்ஜி, திலீப் கோஷ்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அநாகரிகமாக கருத்து தெரிவித்த பாஜக எம்பி- திலீப் கோஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைமை, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்பி-திலீப் கோஷ்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்பி-திலீப் கோஷ்

துர்காபூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி- திலீப் கோஷ், "மம்தா பானர்ஜி எங்கு சென்றாலும் அவர் தன்னை அந்த மாநிலத்தின் மகள் என்று அழைக்கிறார். அவர் தனது சொந்த தந்தையை அடையாளம் காண வேண்டும். தீதி (முதல்வர் மம்தா பானர்ஜி) கோவாவுக்குச் செல்லும் போது, அவர் தன்னை கோவாவின் மகள் என்று அழைக்கிறார். அவர் திரிபுராவுக்குச் செல்லும் போது, திரிபுராவின் மகள் என்று கூறுகிறார். அவர் முதலில் தன் தந்தையை அடையாளம் காண வேண்டும்" என்றார்.

மம்தா பானர்ஜி குறித்த இத்தகைய தரக்குறைவான கருத்துக்கு, கண்டனம் தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், இதுகுறித்து திலீப் கோஷ் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ எந்தவொரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதலாகவோ அல்லது தீங்கிழைக்கும் அல்லது கண்ணியம் மற்றும் அறநெறியை புண்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ அல்லது அறிக்கைகளையும் வெளியிட கூடாது. இந்த விதிகளை மீறிய திலீப் கோஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்த அவதூறு கருத்துகள் தொடர்பாக திலீப் கோஷிடம் விளக்கம் கோரி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், திலீப் கோஷின் கருத்து அநாகரிகமானது மற்றும் சபை நாகரிகத்துக்கு ஏற்றதல்ல. கட்சியின் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளதோடு, இதுபோன்ற கருத்துகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து திலீப் கோஷ் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in