பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருள் விலை மேலும் குறைப்பு

இடைத்தேர்தல் முடிவுகளின் எதிரொலிப்பா?
பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருள் விலை மேலும் குறைப்பு

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்கள் தங்கள் பங்குக்கு மேலும் விலைக் குறைப்பை அறிவித்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு 3 இலக்கத்தை தொட்டதிலிருந்தே, நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகமாக ஆரம்பித்தது. எதிர்க்கட்சிகளும் வாய்ப்பை சரியாக பிடித்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான அலையை அதிகமாக்கின. அண்மையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளிலும் இந்த அதிருப்தி எதிரொலித்தது. கணிசமான இடங்களில் கிடைத்த தோல்வி மூலம் மக்களின் உணர்வுகளை பாஜக புரிந்துகொண்டது.

எரிபொருள் விலை உயர்வு என்பது அன்றாட வாழ்வின் அனைத்து திசைகளிலும் எதிரொலிக்கக் கூடியது. வணிக போக்குவரத்தில் தொடங்கி சந்தைப் பொருட்களின் விலை உயர்வு வரை பணவீக்கத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். பண்டிகை உற்சாகத்தையும் இந்த விலை உயர்வு பாதித்தது. சுதாரித்துக்கொண்ட மத்திய அரசு, எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்தது.

அதன் மூலம் பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 என எரிபொருள் விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பை நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசாக பெருமையுடன் அறிவித்தது. மேலும், வாட் வரி குறைப்பின் மூலம் மேற்கொண்டு எரிபொருள் விலையை குறைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது. இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எரிபொருள் விலை மேலும் குறைந்தது.

உதாரணமாக கர்நாடகா, கோவா மற்றும் அசாம் அரசுகள் பெட்ரோல், டீசலுக்கு தலா ரூ.7 விலை குறைப்பை அறிவித்தன. முன்னதாக உத்தர பிரதேசம், பெட்ரோலுக்கு ரூ.7 மற்றும் டீசலுக்கு ரூ.2 குறைத்தது. இதுபோல குஜராத், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், திரிபுரா, மணிப்பூரில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலைக்குறைப்பை, பொதுமக்களுக்கான தீபாவளி பரிசாக அரசுகள் அறிவித்துள்ளன. முன்னதாக இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கான தீபாவளி பரிசை பொதுமக்கள் வழங்கியிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in