குதிரை பேர அரசியலுக்கு தயாராகும் பாஜக?

திட்டத்தை முறியடிக்க மாநிலங்களில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள்
குதிரை பேர அரசியலுக்கு தயாராகும் பாஜக?

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரிலும் கூட பாஜகவின் ஆட்சி அமைக்க வாய்பிருப்பதாக சில கணிப்புகள் வந்துள்ளன. உபி தவிர மற்ற நான்கு மாநிலங்களில் தொங்குசபை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சில கணிப்புகள் வந்துள்ளன.

இதனால், நாளை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு குதிரை பேர அரசியல் காட்சிகள் பாஜக தரப்பில் அரங்கேறலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்க காங்கிரஸ் அகில இந்திய தலைமை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வெற்றிபெறும் தன் கட்சி எம்எல்ஏ-க்களை குதிரைபேரத்தில் சிக்கிவிடாமல் பாதுகாக்கும் வேலைகளைக் கவனிக்க கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி இருக்கிறது காங்கிரஸ் தலைமை. இதில், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பணியாற்றும் காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் தரப்பிலிருந்து காமதேனு இணையத்திடம் பேசியவர்கள், “பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்கூட்டியே கிளம்பிச் சென்றுவிட்டனர். வெற்றிபெறும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை தங்களது கண்காணிப்பில் எடுத்து ஆட்சி அமைப்பது வரை அவர்களை பாதுகாக்கும்படி அந்தத் தலைவர்களுக்கு தலைமை அறிவுறுத்தி உள்ளது. 2017-ல் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு நடந்தது போல் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜகவிடம் சோரம் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் வேட்பாளர்களாக களத்தில் நின்றபோதே ராகுல் காந்தி முன்னிலையில் உறுதிமொழி எடுக்க வைக்கப்பட்டார்கள். ஆனாலும் குதிரை பேர ஆபத்து முற்றாக விலகவில்லை என்பதால் தான் மாற்று ஏற்பாடாக தலைவர்களை அங்கே அனுப்பி இருக்கிறது காங்கிரஸ் தலைமை” என்றனர்.

2017-ல் கோவாவில் எந்தக் கட்சிக்கும் தனிமெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நிலை உருவானது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பாஜக 13 தொகுதிகளையும் கைப்பற்றின. ஆனாலும் சிறு கட்சிகளின் ஆதரவையும் சுயேச்சைகளின் ஆதரவையும் பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து காங்கிரஸின் 15 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்தனர். இவர்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் பாபு காவ்லேகருக்கு துணை முதல்வர் பதவி தருவதாக குதிரைபேரம் பேசி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை கூண்டோடு தன்வசமாக்கியது பாஜக.

இதேபோன்ற நிலை காங்கிரஸ் ஆளும் பஞ்சாபிலும், பாஜக ஆளும் மணிப்பூர் மற்றும் உத்தராகண்டிலும் இந்தமுறை நடக்கலாம் என்கிறார்கள். இதன் காரணமாகவே காங்கிரஸ் தனது கட்சியின் தேர்தல் பார்வையாளர்களை கண்காணிப்பு பணியில் அமர்த்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, யார் முதல்வர் என்று தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சி கால தாமதம் செய்வதும் சில நேரங்களில் ஆட்சியை பறிகொடுக்க காரணமாகி விடுகிறது.

எனவே, இந்தமுறை தேர்தல் முடிவுகள் வந்ததும் அன்றைய தினமே சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்வதுடன் எண்ணிக்கையை பொறுத்து மறுநாளே ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவும் காங்கிரஸ் தயாராகி வருவதாகச் சொல்கிறார்கள். இதற்காக முன்கூட்டியே ராகுல் காந்தி தலைமையில் உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆக, கடந்த காலங்களை போல் ஏமாந்து நின்று எக்காரணத்தைக் கொண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதில் காங்கிரஸ் தீர்மானமாகவே இருக்கிறது.

Related Stories

No stories found.