‘ஒதுங்கிக்கொண்டால் உங்கள் அமைச்சர்களை விட்டுவிடுவோம் என பேரம் பேசியது பாஜக!’

அர்விந்த் கேஜ்ரிவால் பரபரப்புக் குற்றச்சாட்டு
அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்கோப்புப் படம்

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி விலகிக்கொண்டால், டெல்லி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கமட்டோம் என பாஜகவினர் தன்னிடம் பேசியதாக அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்த கடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

இதற்கிடையே, டெல்லி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின், 4.8 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டபட்டு அமலாக்கத் துறையால் கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டார். அதேபோல், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா டெல்லி அரசின் கலால் வரிக் கொள்கையில் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். இன்று கூட அவரது உதவியாளரின் வீடு உட்பட நான்கு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.

இந்நிலையில் தனியார் செய்தி சேனல் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“முதலில் மணீஷ் சிசோடியா எங்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் அவரை முதல்வராக்குவதாக பாஜகவினர் அவரிடம் பேசினர். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் என்னிடம் பேசினர். ஆம் ஆத்மி கட்சி குஜராத் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டால் சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் திரும்பப் பெறப்படும்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

அவரிடம் பேரம் பேசியது யார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதை எப்ப்டி நானே சொல்ல முடியும்? பாஜகவினர் எப்போதுமே நேரடியாக அணுக மாட்டார்கள். முதலில் ஒருவரிடம் சொல்லி, அவர் மூலம் அடுத்தவருக்குச் சென்று, இறுதியில் அந்தத் தகவல் உங்களை வந்தடையும்” என்று அர்விந்த் கேஜ்ரிவால் பதிலளித்தார்.

குஜராத் தேர்தல் போட்டியில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், தேர்தலில் அக்கட்சி பாஜகவை வென்றுவிடும் என்றும் கூறிய அவர், குஜராத்தில் தொலைக்காட்சி விவாதங்களுக்கு ஆம் ஆத்மி கட்சியினரை அழைக்கக்கூடாது என பாஜக அழுத்தம் தருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in