‘தேசியக் கொடியை பாஜக மதித்ததே இல்லை’ - அகிலேஷ் யாதவ் காட்டம்!

‘தேசியக் கொடியை பாஜக மதித்ததே இல்லை’ - அகிலேஷ் யாதவ் காட்டம்!

சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 9 முதல் 15-ம் தேதிவரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டிருக்கிறார். அத்துடன், தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதில் பாஜக போலித்தனம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்திருக்கிறார்.

முன்னதாக, ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) எனும் பெயரில், ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ‘சுதந்திர வாரம்’ கொண்டாடப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.

இந்நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-க்கு முந்தைய வாரம், விடுதலை இயக்கத்தை நினைவுகூரும் வகையில் அர்ப்பணிக்கப்படும் என்று நேற்று அறிவித்த அகிலேஷ் யாதவ், இந்நாட்களில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசமைப்புச் சட்டம், ஜனநாயக அமைப்பு ஆகியவற்றுக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 1942 ஆகஸ்ட் 9-ம் தேதி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கியதை நினைவுகூர்ந்திருக்கும் அகிலேஷ் யாதவ், அந்த தினம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒவ்வொவருக்கும் உரிமைகளும், மாண்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களின் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என்பதுதான் ஆகஸ்ட் புரட்சியின் கனவாக இருந்தது” என்று கூறிய அகிலேஷ் யாதவ் இந்தக் கனவை நனவாக்கும் பொறுப்பும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும் தேசிய இயக்கத்தின் குறிக்கோள்களையும் காக்கும் பொறுப்பும் சாமானிய மக்கள் மற்றும் சோஷலிஸ்ட்களின் தோள்களில் விழுந்ததாகக் குறிப்பிட்டார்.

ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் மீதான சமாஜ்வாதி கட்சியின் அர்ப்பணிப்பு அனைவரும் அறிந்ததுதான் என்றும், அதிகாரப் பசியுடன் தேசியக் கொடியைக் கையில் எடுத்துக்கொள்வது ஏற்கத்தக்கதல்ல என்று பாஜகவை விமர்சித்தார். “விடுதலை இயக்கத்தில் எந்தப் பங்களிப்பையும் செய்யாதவர்கள் நாட்டுப்பற்றின் பெயரால் இயங்கிவருகிறார்கள். அவர்களே எந்த விதத்திலும் விடுதலை இயக்கத்துடன் தொடர்பில் இல்லாதவர்கள் எனும் நிலையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அவர்கள் என்ன மரியாதை கொடுப்பார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார்.

“உண்மையில், பாஜகவோ அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்போ தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தியதே இல்லை என்று கூறிய அகிலேஷ் யாதவ், “நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்தில் ஏன் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை? பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in