ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிஹாரில் என்ஆர்சி: பாஜக எம்.பி கோரிக்கை

ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிஹாரில் என்ஆர்சி: பாஜக எம்.பி கோரிக்கை
நிஷிகாந்த் துபேகோப்புப் படம்

வங்கதேசத்தவரின் ஊடுருவலைத் தடுக்க ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களிலும் பிஹாரின் குறிப்பிட்ட ஒரு பகுதியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மக்களவையில் நேற்று (பிப்.10) பூஜ்ஜிய நேரத்தின்போது பேசிய அவர், “ஜார்க்கண்டில்க் பாஜக ஆட்சியில் இருந்தபோது, எங்கள் முதல்வர் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார். இதுதொடர்பாக மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்தார். இப்போது நான் ஜார்க்கண்ட், பிஹாரின் ஒரு பகுதியிலும், மேற்கு வங்கத்திலும் என்ஆர்சி கொண்டுவரப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். அப்போதுதான், வங்கதேசத்தவர் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

பிஹாரின் பாகல்பூரைப் பூர்விகமாகக் கொண்ட நிஷிகாந்த் துபே, தனது சொந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வங்கதேச ஊடுருவல்காரர்களால் தொல்லைகளுக்குள்ளாவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் என்ஆர்சி கொண்டுவரப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திவருபவர் நிஷிகாந்த் துபே. 2020-ல், நாடு தழுவிய என்ஆர்சி கொண்டுவரும் எண்ணம் இல்லை என மத்திய உள் துறை அமைச்சகம் விளக்கமளித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “சட்டவிரோதக் குடியேறிகள்தான் எனது மாநிலத்தின் மிகப் பெரிய பிரச்சினை. குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை மற்ற இடங்களில் முக்கியமானவையோ இல்லையோ, எனது மாநிலத்தில் மிக முக்கியமானவை. நாடு முழுவதும் என்ஆர்சி-யைக் கொண்டுவர வேண்டும் என அரசிடம் கோருகிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.