
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர விரும்புபவர்களுக்குத் தனது காரைக் கொடுத்து உதவுவதாகக் கூறியிருந்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்துக்கு பாஜக தரப்பிலிருந்தும் கிண்டலும் கண்டனமும் ஒரே சேரக் கிடைத்திருக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கமல் நாத், “காங்கிரஸிலிருந்து வெளியேற விரும்புபவர்களைக் கட்சி ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. யாரேனும் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டால், காங்கிரஸ் முடிந்துவிட்டது என்று அர்த்தமா என்ன? கட்சியிலிருந்து வெளியேற விரும்புபவர்களைத் தடுத்து நிறுத்த எங்களுக்கு விருப்பமில்லை. தனது எதிர்காலம் பாஜகவில்தான் இருக்கிறது என யாரேனும் நினைத்தால், அவருக்கு என் காரைக் கொடுப்பேன். யாரிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜோதேஷ்வரில் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி மகராஜுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கமல் நாத்தின் சமீபத்திய கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, “கமல் நாத் அப்படி நினைத்தால், அவர் நிச்சயம் நிறைய கார்கள் வாங்க வேண்டியிருக்கும். ஏனெனில், பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் சேர திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று கைலாஷ் விஜய்வர்கியா கூறினார்.
அதேபோல் மத்திய பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுஹானும் கமல் நாத்தின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மால்வா பகுதியில் உள்ள ரத்லாம் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “ஒரு கட்சியின் பெரும் தலைவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்கள் பற்றி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் தொண்டர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று கூறினார்.