எடியூரப்பாவை ஓரங்கட்டியதால் பாஜக தோற்றது... முன்னாள் அமைச்சர் மீண்டும் குற்றச்சாட்டு!

எடியூரப்பா
எடியூரப்பா

எடியூரப்பாவை புறக்கணித்ததால் தான் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாக முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு எடியூரப்பாவை புறக்கணித்ததே காரணம் என்று பா.ஜனதா முன்னாள் மந்திரி ரேணுகாச்சார்யா குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரேணுகாச்சார்யா, “எடியூரப்பாவை பா.ஜனதா மேலிடம் புறக்கணித்ததால் தான் சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தது. ஆடு தொடாத பச்சை புல் இல்லை என்பது போல் எடியூரப்பா செல்லாத கர்நாடக கிராமங்கள் இல்லை. பூத் கமிட்டி அளவில் அவர் கட்சியை வளர்த்தார்.

பிரதமர் மோடியை போன்று கர்நாடகத்திற்கு எடியூரப்பா தேவை. அவரைப் புறக்கணித்ததால் தான் சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வியை தழுவியது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் கட்சி பொறுப்பில் உள்ளனர். அவர்களது முகத்தை பார்த்து தான் இன்று கட்சி தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளது.

ரேணுகாச்சார்யா
ரேணுகாச்சார்யா

நான் நாடாளுமன்ற தேர்தலில் தாவணகெரே தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு டிக்கெட் கிடைக்குமா என்பது தெரியவில்லை. டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் எனது தொகுதி மக்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்” என்றார்

மேலும் அவர், பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குருசித்தன கவுடா, அவரது மகன் ரவிக்குமாரை அவர்களது இல்லத்தில் நேற்று சென்று சந்தித்தார். அவர்களுடன் ரேணுகாச்சார்யா காலை சிற்றுண்டி சாப்பிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், " தேர்தல் நேரத்தில் தொகுதி முழுவதும் சென்று கட்சிக்காக பிரசாரம் செய்தவரை நோட்டீஸ் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தேர்தல் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்தால், யாராக இருந்தாலும் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை கடைப்பிடிக்காமல் அவரையும், அவரது மகனையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in